தமிழில் சசிக்குமார் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான படம் தான் நாடோடிகள். இந்தப் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை தான் அபிநயா. தமிழ் நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு அழகான தோற்றம் இருந்தாலும் கூட இவருக்கு இயற்கையிலேயே சரியாக வாய் பேசாத, காது கேட்கும் திறன் குறைபாடு உடையவர். ஆனாலுமே கொஞ்சம் கூட மனம் தளராமல் அவருடைய விடா முயற்சியால் சினிமா உலகில் தன் நடிப்பின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர்.
அது மட்டும் இல்லாமல் மக்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார். மேலும், இவரால் சரியாக வாய் பேச முடியாது என்பதே நாடோடிகள் படம் வெளியான பின்னர் தான் பலருக்கும் தெரிந்தது. ஆனாலுமே இந்தப் படத்திற்கு மேல் இவர் அதிகமாக பேசப்படவில்லை. கடைசியாக இவர் நடிப்பில் 2017 ல் ‘விழித்திரு‘ என்ற படம் வந்தது. அதன் பின்னர் இப்போது சினிமா பக்கம் வராமல் காது கேளாதோர் மற்றும் வாய்பேச முடியாத குழந்தைகளுக்கு சைகை மொழியை கற்றுத் தரும் அவசியத்தை குறித்து பல்வேறு பள்ளிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறாராம்.
இதுகுறித்து பேசியுள்ள அபிநயா, இந்தியாவில் வாய் பேச முடியாத காது கேட்க முடியாத மாற்றுத் திறனாளிகள் 5 கோடி பேருக்கு மேல் இருக்கிறார்கள். அப்படி இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் யாருக்குமே சைகை மொழி கூட தெரியாது. அவர்களுக்கு பிறப்பில் இருந்தே எந்த ஒரு உணர்வையுமே வெளிபடுத்துவதில் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனது பெற்றோர்கள் எனக்கு வீட்டிலேயே சைகை மொழியை கற்றுக் கொடுத்தார்கள்.
என்னைப் போன்ற மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர்கள் சைகை மொழியைக் கற்றுக் கொண்டு அதை தங்களது குழந்தைகளுக்கு அவர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். அதற்காக தற்போது பல்வேறு நிகழ்ச்சிகளிலும் வண்டிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். அப்படி இப்போது என்னுடன் பழகும் சில நண்பர்கள் கூட என்னுடன் பேச வேண்டும் என்பதற்காக என்னை பார்த்து சைகை மொழியை கற்றுக் கொண்டு என்னிடம் சந்தோஷமாக பேசுகிறார்கள்.
என்னைப் போன்ற மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளை நேரில் சந்தித்து அவர்களுடன் உரையாடி சந்தோஷப்படுகிறேன். மேலும் இப்படி இருக்கும் மாற்றுதிறன் கொண்ட குழந்தைகளுக்காக உள்ள பள்ளிகளில் சைகை மொழி சொல்லி கொடுக்க வேண்டியது கட்டாய பாடமாக்க வேண்டும் என்று பள்ளிக்கே நேரில் சென்று வலியுறுத்தி வருகிறேன். தமிழ்நாடு, ஆந்திரா. தெலுங்கானா போன்ற பல்வேறு பள்ளிக் கூடங்களுக்கு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன் என்று கூறியுள்ளார் அபிநயா.