கடையில் வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கும் பானம் எவ்வளவு ஆரோக்கியத்தைத் தரும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. ஆனால், வீட்டிலே நீங்கள் செய்திடும் ஹோம்மேட் ஹார்லிக்ஸ் (Homemade Horlicks Powder) பானம், நிச்சயம் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதை எப்படி செய்வது என இந்தப் பதிவில் பார்க்கலாம்.ஹோம்மேட் ஹார்லிக்ஸ் பவுடர் தயாரிப்பு முறை
தேவையானவை
முளைக்கட்டிய முழு கோதுமை – 1 கப் , பாதாம் – 10 , முந்திரி – 10 , பிஸ்தா – 10 , பால் பவுடர் – 2 – 3 டேபிள்ஸ்பூன்
செய்முறை
கோதுமை முளைக்கட்டுவது எப்படி?
கோதுமையை நன்றாக கழுவி கொள்ள வேண்டும்.
கோதுமையை 6-7 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். வெள்ளை காட்டன் பை அல்லது துணியில், கோதுமையை போட்டு கட்டித் தொங்க விட வேண்டும்.சமையல் அறையில் எதிலாவது தொங்கும்படி கட்டிவிடுங்கள்.
காலையும் மாலையும் கோதுமை இருக்கும் பையை, லேசாக தண்ணீரால் அப்படியே தெளித்து விடலாம்.இரண்டு நாள் வரை இப்படி செய்யலாம்.3-4 நாளில் கோதுமை முளைவிட்டிருக்கும். (உங்கள் ஊரின் வானிலை பொறுத்து முளைக்கட்டுவது மாறுபடும்.)
3 அல்லது 4-ம் நாளில் நன்றாக முளைவிட்டிருந்தால் அன்று காலை தண்ணீர் தெளிக்க வேண்டாம்.வெள்ளைத் துணியிலிருந்து, கோதுமையை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தொட்டுப் பார்த்தால் உலர்ந்தது போல தெரியும்.ஆனாலும், ஒரு உலர்ந்த வெள்ளைத் துணியில் முளைவிட்ட கோதுமையைப் போட்டு நன்கு உலரவிடவும். லேசாக இருக்கும் தண்ணீர் கூட பருத்தி துணியால் ஈர்த்து கொள்ளும்.
பாதாம், முந்திரி, பிஸ்தா பவுடர் செய்ய…
10 பாதாமை வெறும் வாணலில் நன்றாக 5-6 நிமிடங்கள் வரை நன்கு வறுத்துக் கொள்ளுங்கள்.அதுபோல முந்திரி, பிஸ்தாவையும் நன்கு வறுக்கவும்.பின் சூடு ஆறியதும், அனைத்தையும் மிக்ஸியில் போட்டு பவுடராக அரைத்துக் கொள்ள வேண்டும்.இதை ஒரு பவுலில் போட்டு அப்படியே ஆறவிடுங்கள்.
ஹோம்மேட் ஹார்லிக்ஸ் பவுடர் செய்முறை
அடுப்பில், மிதமான தீயில், உலர்ந்த வாணலியை வைக்கவும்.உலர்ந்த வாணலியில் கோதுமையை கொட்டி நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும்.லேசாக பொரியும் சத்தமும் வறுத்தால் பட பட என வரும் சத்தமும் இருந்து, நல்ல பிரவுனாக மாறியதும் அடுப்பை அணைத்து விடவும்.
ஒரு கோதுமையை எடுத்து கரண்டியால் நசுக்கினால், அது பொடியாகிறது போல நசுங்க வேண்டும். அந்த அளவுக்கு நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள்.நன்றாக வறுத்தால்தான் பவுடராக கிடைக்கும்.வறுத்த கோதுமையை, உலர்ந்த வெள்ளைப் பருத்தி துணியில் போட்டு பரவலாகக் கொட்டி ஆற விடுங்கள்.
இதை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். நன்றாக பவுடராகும் வரை அரைத்த பின் அந்த பவுடரை சலிக்க வேண்டும்.சலித்த பவுடரை மீண்டும் மிக்ஸியில் போட்டு அரைக்கவும். மீண்டும் அதை சலித்தால் நைசான பவுடராக வந்திருக்கிறதா எனப் பாருங்கள்.
நைசான பவுடராக வந்திருந்தால் அதை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் மீண்டும் சலித்து அரைக்கவும்.இப்படி 3-4 முறை அரைக்க வேண்டி இருக்கும். (மிக்ஸியில் அரைத்தால் இப்படி 3-4 முறை அரைக்க வேண்டியதாக இருக்கும்).
உங்களால் வீட்டில் அரைக்கக் கடினமாக இருந்தால், மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளலாம். இன்னும் சுலபம்.இப்போது அரைபட்ட கோதுமை பவுடரில், அரைத்து வைத்துள்ள பாதாம் பவுடர், பால் பவுடரை சேர்த்து கலக்கவும்.
உங்கள் குழந்தைக்கு சாக்லேட் சுவைப் பிடித்தால், 2 ஸ்பூன் கொகோ பவுடரை சேர்த்துக் கொள்ளலாம்.நன்றாக கலக்க வேண்டும் என்பதற்காக, மிக்ஸியில் ஒருமுறை இந்த அனைத்து பவுடரையும் போட்டு சுத்திவிட்டால் நன்றாக கலந்துவிடும்.அவ்வளவுதான்… ஹோம்மேட் ஹார்லிக்ஸ் பவுடர் ரெடி.உலர்ந்த டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
85 – 90% சதவிகிதம் கடையில் விற்கும் ஹார்லிக்ஸ் டேஸ்ட் கிடைக்கும்.ஆனால் இது சுத்தமான முறையில், ஆரோக்கியமான முறையில் தயாரிக்கப்பட்ட ஹோம்மேட் ஹார்லிக்ஸ். உங்கள் கையால் செய்த சிறப்பும் உண்டு.இந்த ஹோம்மேட் பவுடர் 20 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். ஃப்ரிட்ஜில் வைப்பது நல்லது.எப்போது பயன்படுத்தினாலும் உலர்ந்த ஸ்பூனால் பவுடரை எடுத்துப் பயன்படுத்தலாம்.1 வயத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட ஏற்றது.
இந்த வீடியோ சம்பந்தமாக உங்களுக்கு ஏதேனும் குறை நிறை இருப்பின் வீடியோ ஓனரை அணுகவும்.நன்றி